சந்திப்பு . . .
இரைச்சல் நிரம்பிய
சிற்றுண்டிச் சாலையில்
நீண்ட நாட்கள் கழித்து
சந்தித்துக் கொண்டோம்.
நமக்குப் பிடித்த
இளையராஜா பாடலை
ஒலித்து அழைத்தது
உன் அலைபேசி.
என்னுடன் உணவருந்தி கொண்டிருப்பதாக
பதிலளிக்கிறாய் .
நீண்ட நாட்கள் கழித்து
உன் உச்சரிப்பில்
அழகாக இருக்கிறது
என் பெயர்.
பரஸ்பர நண்பர்களையும்
பரஸ்பர விரோதிகளையும்
பற்றி சிறு குறிப்பு வரைந்து கொண்டோம்
மசால் தோசையை
உண்டு கொண்டே.
எனக்கே மறந்து போன
என் பழைய கவிதை வரிகளை சொல்லி
என்னை அதிர வைத்தாய் நீ.
உனக்கு மறந்து போன
உன் கல்லூரி கால
வீட்டின் முகவரியை
சொல்லி
கணக்கை சரி செய்து கொண்டேன் நான்
இறுதியாக
அருந்திய சக்கரை இல்லாத காபியில்
சுவைத்தது
வாழ்க்கையின் சில நிமிடங்கள்...
0 comments:
Post a Comment